தேனி மாவட்டத்தில் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெற்றுக்கொண்டு, தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தேனி, ஜன.9-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டத்தில் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர்
தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களான தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குகே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் குடும்ப உறுப்பினர் அட்டை பெற்றுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 3,64,353 குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன் பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த சுமார் 938 நபர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான பணிகள் இன்று (9.1.2026) முதல் 31.1.2026 வரை தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க 243 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNEGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர். தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றிய பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
அதன்படி, இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயனடைந்து வரும் நலத்திட்டங்கள் குறித்தும், பொதுமக்களின் கருத்துக்கள் குறித்தும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகள் குறித்தும் பொதுமக்கள் விண்ணப்படிவங்களில் பூர்த்தி செய்து, தன்னார்வலர்களிடம் வழங்கும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட கலெக்டர்ஃ தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா, உதவி இயக்குநர்கள்
வில்லியம் ஜேசுதாஸ்) (பேரூராட்சிகள்), அண்ணாதுரை (தணிக்கை), வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களான தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்






Comments