தேனி மாவட்டத்தில் 4.30 லட்சம் ரேசன் கார்டுதார்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.3000/- ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இன்று (8.1.2026) தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாய விலைக்கடையில், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3000/- ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
இந்தியா முழுவதும் பிஹு, மகர சங்கராந்தி, லோஹ்ரி பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை. ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3000/- ரொக்கம் மற்றும் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள். சுய உதவி குழுக்கள், மகளிரால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகள் மூலமாக இன்று (8.1.2026) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலமாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 517 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 4,30825 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000/-ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம், அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் (பொ) க.வாஞ்சிநாதன், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜீ, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments