Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.20-

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தேனி மாவட்ட தலைவர் செல்லத்துரை, பாரதிய கிஷான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் பாபு, மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் கொடியரசன், முல்லை சாரல் விவசாய சங்க தலைவர் ராஜா,  தென்னை விவசாயிகள் சங்க வேல்முருகன், கட்சி சார்பற்ற விவசாய சங்க சிவனாண்டி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி மற்றும் கூட்டுறவு சங்க அணி செயலாளர் குப்புசாமி உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக பொய் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு  கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து கறிக்கோழி உற்பத்தி கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்ற 21-ந் தேதி அன்று அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்திருந்த நிலையில்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உள்பட 9 பேர் மீது பொய் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கறிக்கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து விவசாயிகளிடம் செக் மற்றும் பாண்டு பேப்பர் மூலம் எழுதி பெற்றுக் கொண்டு குஞ்சுகளை இறக்கப்படவில்லை என்றால் பல்வேறு சட்ட சிக்கல்களை, இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி குஞ்சுகளை அடாவடியாக விவசாயிகள் இடத்தில் இறக்கி வந்தனர். 

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உட்பட விவசாயிகளை ஒன்றிணைத்து குஞ்சுகளை இறக்க வேண்டாம். முத்தரப்பு பேச்சுவார்த்தை, கறிக்கோழி உற்பத்திக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை, முடிந்தபின் குஞ்சுகளை இறக்கிய தொழில் செய்யலாம் என்று தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. கூலி உயர்வு தொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வந்தநிலையில் தற்போது கடந்த இரண்டு மாதமாக போராட்டம் அறிவிக்கப்பட்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 13 நாட்களுக்கு மேலாக கறிக்கோழி உற்பத்தி நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது. கறிக்கோழி நிறுவனங்கள் நாங்கள் கோழிக்குஞ்சுகளை இறக்க வேண்டாம் என்று சொன்னதால் குஞ்சுகள் இறந்து விட்டதாகவும்,

பொது சொத்து சேதாரம் ஏற்பட்டதாகவும், மேலும் குஞ்சுகள் இறக்க தடுத்து நிறுத்தியதால் இறந்ததாகவும் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்து விட்டு போலீசாரை ஏவி விட்டு கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படியே போராட்டத்தை திசை திருப்பவும், கலைக்கும் நோக்கத்தோடு இரவோடு இரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்களை இரவு 10 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குடும்பத்திற்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் போலீஸ் நடந்து கொண்டதனால் விவசாயிகள், நிர்வாகிகள் பல்வேறு பகுதியில் தேடி இறுதியாக மேற்கொண்ட போலீஸ் நிலையத்தில் கைது செய்து வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 

விவசாயிகள் ஒன்று திரண்டு அந்த இடத்தில் செல்லும்பொழுது எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உள்பட பலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட பிரதான பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 

எனவே கைது செய்த அனைவரையும் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சட்ட விரோதமாக கைது செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி கூலி உயர்வு தொடர்பாக முறையான பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை நிறுவனங்கள் திசை திருப்பும் போக்கினை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

.............................

நாகராஜ், தலைமை நிருபர் 

Comments