Skip to main content

தேனி மாவட்டத்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் பென்னிகுவிக் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

தேனி, ஜன.15-

தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இன்று (15.12026) கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பாரப்பரிய உடையணிந்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உழவர்களின் உழைப்பிற்கும், உயர்வுக்கும் துணைநிற்கும் வகையில் உழவர்கள் போற்றி வணங்கக்கூடிய காளை மாட்டு வண்டியில் அமர்ந்து ஒட்டி சென்று மக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில்,
விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விவசாயிகளின் அறுவடைத் திருவிழா இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும். விவசாயிகள் சிறப்பாக விவசாயம் செய்வதற்கு நீர் மிக முக்கியமானதாகும். தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கு அணைகள் கட்டப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணை பற்றியும், அதனை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்கள் பற்றியும் புத்தகங்களில் படித்துள்ளேன். ஆனால் இன்று பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நேரடியாக கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வெளிநாட்டவர் தனது சொத்துக்களை விற்று இந்த அணை கட்டி உள்ளார். இதன் மூலம் தேனி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனம் வசதி பூர்த்தி செய்யப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தங்கள் குழந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அவரின் பெயரை சூட்டி மகிழ்ந்து வருகிறார்கள்.

கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களை போன்று நாமும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்விழாவில் ஜாதி மதம், இனம் அனைத்தையும் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.

இதனை அடுத்து மாணவ, மாணவியர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், இவ்விழாவில் கோலி குண்டு கிட்டி, பம்பரம் சுற்றுதல் மான் கொம்பு சுற்றுதல், மண்பானை உடைத்தல், சிலம்பாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் கலை பண் பாட்டுத்துறையின் சார்பில் பரதநாட்டியம், நையாண்டி மேளம். தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம் மாடாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல் அம்மிக்கல், போன்றவைகளும் காட்சி படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக, விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து செய்தி மடலினை மாவட்ட கலெக்டர் அவர்கள் சுய உதவிக்குழு மகளிர்களிடம் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராநல்லதம்பி. உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வளர்மதி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பள்ளி மாணவ மாணவியர்கள், கிராமிய கலைக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
.................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments