தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா: பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தேனி, ஜன.13-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (13.1.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்து தொழில்களுக்கும். அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், சுருள்வாள் சுற்றுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட கலெக்டர் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பொங்கல் வைத்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும், பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார். பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத் பீடன். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், உதவி செயற்பொறியாளர் மணிமாறன், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக சூப்பிரண்டு சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதுவலர் முத்துக்குமார் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்









Comments