திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி
தேனி, டிச.5-
திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் ரயில் திட்டத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டம் முடிவடைய வாய்ப்புள்ளது.
ஆனால் திண்டுக்கல்-சபரிமலை திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வரை ஒதுக்க ரயில்வே துறைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. ஏனென்றால் சபரிமலை சீசன் என்பது 2 மாதங்கள் மட்டும்தான். அதனால் இந்த ரயில் திட்டத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு என்ன வருவாய் கிடைக்கும் என்பதை ஆராய்வார்கள்.
அதனால் திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த ரயில் திட்டத்தை இரண்டாக பிரித்து திண்டுக்கல்-லோயர்கேம்ப் எனவும், லோயர்கேம்ப்-சபரிமலை ரயில் திட்டம் எனவும் இரண்டாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தற்போது டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உதவி உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த ரயில் திட்டத்தை இரண்டாகப் பிரித்து செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்



Comments