தேனி நகர மக்களின் கனவு நினைவானது; மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி திட்டத்திற்கான பூஜை:
தேனி, டிச.26-
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் படகுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பல ஆண்டுகளாக வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் 26.12.2025 அன்று மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளுக்கான பூஜையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல். நடைபாதை, பூங்கா. தடுப்புச்சுவர், படகுகள் நிறுத்துமிடம் நுழைவுவாயில், அலுவலக கட்டிடம். பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்குளம். அமரும் மேடை உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதுபோல கண்மாய் நீரில் உள்ள ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல் பறவைகள் தீவு அமைத்தல், கண்காணிப்பு புகைப்படக் கருவி அமைத்தல், பூங்கா மின் வசதிகள் அமைத்தல், படகுகள் மற்றும் பூங்கா விளையாட்டு கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், தேனி திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சாலமன் கிறிஸ்தவ தாமஸ், ஒப்பந்ததாரர் பாண்டியராஜ், உதவி பொறியாளர்கள் அரவிந்த், ஆரிப், ஷியாம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனியில் பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஏங்கி வந்த தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கனவான மீறு சமுத்திர கண்மாயில் படகு சவாரி திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.............................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments