தேனி, டிச.22-
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 4-வது புத்தக திருவிழா 21.12.205 முதல் 28.12.2025 வரை நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாக மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து புத்தக அரங்குகளையும், பல்வேறு துறைகளில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சி அரங்குகனையும் பார்வையிட்டனர்.
விழாவில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 4-வது புத்தகத் திருவிழாவினை இப்பள்ளி மைதானத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய நாடார் சரஸ்வதி பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிக அளவு புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அதிக அளவு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி பாடங்கள் மட்டுமல்லாமல் பிற அறிவார்ந்த புத்தங்களையும் படிப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்புத்தக திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மின்னணு புத்தகங்கள் E-book வரப்பெற்றாலும் அனைவருக்கும் அதனை பயன்படுத்த முடிவதில்லை எனவே இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். புத்தக திருவிழாவில் தொடக்க நாள் முதல் இறுதிநாள் வரை புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் நல் ஆளுமைகளின் சிறப்புரைகளும். பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இன்றைய மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியாக கருதப்படுகிறார்கள். எனவே மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உங்களுடைய தேடலுக்கான சிறந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி படித்து அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், மகளிர் திட்டம் இயக்குனர் சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முகமதுஅலி ஜின்னா, உதவி இயக்குநர் (தணிக்கை) அண்ணாதுரை, முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதுவலர் நல்லதம்பி, மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்பது முகமது, தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் பொதுச்செயலாளர் ஆனந்தவேல், உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டி மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments