Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.25-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24.11.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமை தாங்கினார். 

மாவட்ட தலைவர் வேந்தர் பாலா, மாவட்ட பொருளாளர் வீரா ராமச்சந்திரா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் மற்றும் நீர் வழித்தடங்களில் தனியார் நிறுவனத்தினர் அமைத்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை அகற்ற வேண்டும். தேனியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் விபச்சார குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும். 

தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

................................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments