கம்பம் அருகே மணற்படுகை பகுதி முல்லை ஆற்றில் கரை உடைப்பை சரி செய்ய வேண்டும்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, நவ.25-
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஐந்து மாவட்ட தலைவர் மனோகரன், கெளரவ தலைவர் சிவமணி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள மணற்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு தலைமதகு அமைத்து அங்கிருந்து உத்தமபாளையம் பரவு கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி செய்யப்படுகிறது.
அந்த தலைமதகு அமைந்த இடத்தில் தெற்குப் பக்கத்தில் முல்லைப் பெரியாற்றில் கிழக்கு கரையில் 8 மீட்டர் அகலத்திற்கு, 60 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் வாழை காய்கறிகள், நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
இந்த சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும். தற்சமயம் அந்த ஆற்றின் கரை உடைந்த இடத்தில் உள்ள கரை கடந்த 7 ஆண்டுகளாக மண் அரிப்பு ஏற்பட்டு மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் இருந்த கரையை விவசாயிகள் தங்களது சொந்த செலவில் சுமார் ரூ.8 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். அப்படி இருந்தும் தற்சமயம் ஏற்பட்ட வெள்ளத்தால் கரை உடைப்பு ஏற்பட்டு மிகுந்த சேதம் ஆனது.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தினை நேரில் ஆய்வு செய்து கரை உடைப்பை சரி செய்து விவசாயின் வாழ்வாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
...................................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments