தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
தேனி, அக்.10-
இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ,
இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர்.
மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளில் சிக்கி குடும்பத்தை தவிக்க விடுகின்றனர். உற்றார் உறவினர்களுடன் மோதல், பக்கத்தில் வசிப்பவர்களுடன் மோதல் என்று மதுவால் ஏற்படும் தீமைகள் ஏராளமாக உள்ளது. மது அருந்தும் நபர்களை பார்த்து மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்படுகிறது. இவர்களால் வீட்டில் உள்ள அனைவரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்படுகிறது.
ஆகையால் அனைத்து மக்களும் தீபாவளி பண்டிகையை எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி குடும்பங்களுடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் விதமாக வரும் 19.10.2025, 20.10.2025 ஆகிய மதுக்கடைகளை மூட வேண்டும். மேலும் அந்த நேரத்தில் கள்ள சந்தையில் மது விற்பனைகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல சென்னை, கோவை போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடி திரும்பி செல்லும் வண்ணமாக தீபாவளிக்கு மறுநாள் 21.10.2025 அன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் 22.10.2025 வரை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் அதிக அளவு இயக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Comments