Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: குறவர் சமூக மக்களுக்காக வன வேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.27-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வன வேங்கைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் தேனி மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலையில் குறவர் சமூக மக்கள் 27.10.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள்  எழுப்பினார்கள்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில்,
இந்து (SC) குறவர் சமூக மக்கள் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடவீர நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமம் இளவெயினி நகர் பகுதியில் மற்றும் தேனி மாவட்ட முழுவதும் வசித்து வருகிறோம். 
மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மேற்கண்ட இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கக்கூடிய குறவர் சமூக மக்களுக்கு அன்றைய மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கண்ட பட்டா வழங்கிய இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக தனி தரைதளம் 175 குடியிப்புகள் கட்டி முடிக்கப்பட்டு குறவர் (SC) 88 குடும்பங்களுக்கும் நரிக்குறவர் வடமாநிலத்தவர்கள் 87 குடும்பங்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கினர். வீடுகள் வழங்கி தற்போது வரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் வடமாநிலத்தவர்களான பிற மாவட்டங்களை சார்ந்த நரிக்குறவர் சமூகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட 87 குடியிருப்புகளில் ஒருசில நபர்கள் குறிப்பாக 10 வீடுகள் மட்டும் அவ்வபோது பயன்படுத்தி வருகின்றனர். மீதம் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் குடியிருக்காமலும், பயன்படுத்தாமலும், மேலும் மின் இணைப்புக்கூட பெறாமலும் பயனற்ற நிலையில் வீடுகள் சேதாரம் அடைந்து வருகிறது. 
மேலும் முள் புதர்களும் அடர்ந்த செடிகளும் வளர்ந்து பாம்பு மற்றும் கொடிய விஷப்பூச்சிகள் மக்களை அச்சுருத்துகிறது. 
இந்நிலையில் நரிக்குறவர் தலைவர் சங்கர் என்பவர் ஒரு சில புரோக்கர்கள் மூலமாக மேற்கண்ட வீடுகளை தவறுதலாக விற்பனை செய்து வருகிறார். அதனால் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் முயற்சியில் மக்கள் வரிப்பணத்திலும் நிதி ஒதுக்கி கட்டப்பட்ட வீடுகள் வீணாகின்றன. 

அதனால் சொந்த வீடு, நிலம் இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இந்து (SC) குறவர் சமூகத்திற்கு ஏற்கனவே மேற்கண்ட நிலத்தில் பட்டா பெற்ற மக்களுக்கும், முன்பு தேனி மாவட்ட கலெக்டராக இருந்த ஷஜீவனா  அவர்களின் உத்தரவின் பேரில் உள்ள நபர்களுக்கு பயனற்ற மற்றும் பயன்படுத்தாத குடியிருப்புகளை வழங்கிட தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை செய்து இந்த சமூக மக்களை பொருளாதாரம், கல்வியில் மேம்பட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.........................
பாண்டியன், இணை ஆசிரியர் 




Comments