Skip to main content

தேனி பஸ் நிலையத்தில் தவித்த ஆதரவற்ற மூதாட்டிகளை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த மருந்தாளுநர்

தேனி, அக்.25-

தேனி பஸ் நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க இரு மூதாட்டிகள் ஆதரவின்றி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் போலீசார் உதவியுடன் அவர்களை மீட்டார். அதன்பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் பெயர் கனகா 70 மற்றும் வசந்தா 68 என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மதுரை மாவட்டத்தை சேர்ந்த அவர்களை அவர்களது குடும்பத்தினர்களே தேனி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து ஆதரவின்றி தவித்த மூதாட்டிகளுக்கு உணவு கொடுத்து மாற்று உடை அணிவித்து அவர்களை தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியில்  உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார். இதுகுறித்து ரஞ்சித்குமார் கூறுகையில், வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து தேனி மாவட்டத்தில் தவிக்க விட்டு செல்லும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது. மனிதநேயத்துடன் முதியோர்களை பாதுகாத்து பராமரிக்க முன்வர வேண்டும். வெளியூர் மற்றும் கேரளாவில் இருந்து முதியவர்களை தேனி மாவட்டத்தில் விட்டு செல்பவர்களை சமூக நலத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

...............................

S.அய்யன் குமார், நிருபர் 




Comments