Skip to main content

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10-

தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஒரு சமூகம் மற்றும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பகுதியாக உள்ளது.

கல்விக்கடன் குறித்து மாணவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை வங்கி அலுவலர்களிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். மேலும், கல்விக்கடன் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று எதிர்காலத்தில் வெற்றி பெற்றவர்களாக உருவாக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2.47 கோடி வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங்  வழங்கினார். மேலும், இதர மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்கள் விரைந்து பரீசிலனை செய்யப்பட்டு கல்விக்கடன் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ரவிக்குமார், வட்டாட்சியர் மருதுபாண்டி ,கல்லூரி முதல்வர் ஐசக், துணை முதல்வர் ஜோசிபரம்தொட்டு மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.....................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments