இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு: தேனியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்ப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் தேனி பங்களா மேடு நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில்,
புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வெற்றிக்கு வித்திட்ட மாவட்டம், இந்த தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிறைய திட்டங்களை கொடுத்தோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். இந்தப் பகுதி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், அரசு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்பட்டன.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அம்மா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்கு பிறகு அணையை இரு கரைகளிலும் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தோம், கேரள அரசு அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி நம் அதிகாரிகள் மீது வழக்கு போட்டார்கள். இருப்பினும் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல முடியாதளவுக்கு தடுத்து நிறுத்தி கேரள அரசு இடையூறு செய்தது. இன்றைய முதல்வர் கண்டுகொள்ளவில்லை.
இண்டியா கூட்டணியில் தான் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. உண்மையிலேயே தேனி மாவட்ட மக்கள் மீது திமுக-வுக்கு அக்கறை இருந்தால் கேரள முதல்வரிடம் பேசி அணையை பலப்படுத்தும் வேலையை செய்ய வேண்டும். நான்காண்டுகள் ஓடிவிட்டன, நான் முதல்வராக இருந்தபோது கேரள முதல்வரை சந்தித்தேன், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, திமுக அரசு தான் இதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பில்லை. நேற்றைய தினம் குடிநீர் பைப்பை 3 பேர் உடைக்கிறார்கள், அதை பார்க்கும் ஒரு பெண் 100 எண்ணுக்கு போன் செய்கிறார். போலீசார் வருகிறார்கள். அந்த குற்றவாளிகள் விசாரணைக்கு வரும் போலீசாரை தாக்குகிறார்கள்.
போலீசையே தாக்குகிறார்கள் என்றால் இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை எண்ணிப்பாருங்கள். காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை. குற்றவாளிகளுக்கு போலீசாரை கண்டால் பயமில்லை. அரசியல் தலையீடுகளால் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது. காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும். எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதோ, அங்குதான் வளர்ச்சி அதிகமாக இருக்கும். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும். போதை பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை. நம் குழுந்தைகளின் வாழ்க்கை போதையால் அழிந்துவிடும். மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எப்போது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள்.
அதிமுக-வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. அதற்கு திறமை வேண்டும். ஒரு திறமையற்ற முதல்-அமைச்சர் நம்மை ஆள்கிறார்.
அதுமட்டுமல்ல, 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளை திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்து விட்டோம். நாடு ஏற்றம் பெற கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் புரட்சி ஏற்படுத்தினோம். தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என பல பள்ளிகளை திறந்தோம். திமுக அரசு பள்ளிகளை மூடிவிட்டனர்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனால் 1 லட்சம் ஆசிரியர்களின் நிலைமை மோசமாகி விட்டது. இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்று சொல்லவில்லை.
இந்தியாவின் சூப்பர் முதல்-அமைச்சராம் ஸ்டாலின். எதில் என்றால் கடன் வாங்குவதில் தான். கடனை திருப்பி செலுத்த மக்களிடம் வரி போட்டு தான் செலுத்தனும். திமுக-வின் ஐந்தாண்டு முடியும் தருவாயில் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு.
73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021-ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுக-வின் இந்த ஐந்தாண்டு கால கடன் சுமை அதிகம். கடன் வாங்கினீர்களே, நல்ல திட்டம் ஏதாவது கொடுத்தீர்களா?
அரசு ஊழியர் காலிப்பணியிடம் ஐந்தரை லட்சம் நிரப்பப்படும் என்றனர், ஆனால் வெறும் 50 ஆயிரம் பேரை தான் நியமித்துள்ளனர். அதேநேரம் கடந்த நான்காண்டில் 75 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றார்கள். இதனை மேற்கொண்டுதான் காலிப்பணியிடங்கள் அதிகரித்திருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. அதிமுக ஆட்சியில் அம்மா முதல்-அமைச்சராக இருந்த போது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கி வருகிறது. அம்மா வழியில் வந்த அரசு கடந்த 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. திமுக-வும் முதலீட்டாளர் மாநாடு நடத்தியது. ஆனால் எதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கிடைத்த வேலைவாய்ப்பை திமுக-வுடையது என ஸ்டிக்கர் ஒட்டி கொண்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் ஜெர்மனி சென்றிருக்கிறார். ரூ.3200 கோடி முதலீடு ஈர்த்ததாக செய்தி வந்தது. அதில் 2 தொழில் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, அதை விரிவாக்கம் செய்ய ஜெர்மனிக்கு அழைத்துச்சென்று ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும்தான் புதிது, அதுவும் இந்தியாவில் தொழில் தொடங்கிய நிறுவனம் தான். இப்படித்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது தான் 10 ஆண்டுகளில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம், 460 நடமாடும் மருத்துவ குழு அமைத்தோம், 264 ஆரம்ப சுகாதார நிலையம், 168 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தோம். கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, அம்மா கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். மனிதாபிமானம் இல்லாத முதல்-அமைச்சர் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் 75 கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தோம். மருத்துவத் துறையில் சிறந்த மாநிலமாக விளங்கினோம். அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளை பெற்றோம். போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வி இப்படி பல துறைகளிலும் விருதுகளை பெற்றோம். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின் போதுதான்.
மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு
இது ஊழல் நிறைந்த அரசு. டாஸ்மாக் மிகப்பெரிய ஊழல், அமலாக்கத்துறை விசாரித்ததில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்கிறார்கள். மின்கட்டணத்தை இந்த ஆட்சியில் 67% உயர்த்தி விட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில் தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்தி விட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு தான்.
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்துவரி ஊழல் நடத்தி, பல பேர் கைதாகியுள்ளனர். தைப்பொங்கலுக்கு தரமான வேட்டி சேலை அதிமுக ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும். அதுபோல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். கொரோனாவில் ஓராண்டு பொருட்கள் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். இன்று எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது, வருமானம் குறைந்துவிட்டது. ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தன கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் 12 கோடி ரூபாய் கொடுத்தோம், சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ.25 ஆயிரம் கொடுத்தோம், வக்பு வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல் தர்கா புனரமைப்பு நிதி வழங்கினோம்,
இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம்.
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கறை சேதமடைந்து விட்டது. அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு ரூ.4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்து கொடுத்தேன், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்துக் கொடுத்தோம், மறைந்த அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கினோம், திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் அமைத்தோம், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம், இவற்றை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
பாஜக., அதிமுக-வை விழுங்கிரும் என்கிறார் ஸ்டாலின், 1999, 2001 தேர்தல்களில் பாஜக-வோடு திமுக கூட்டணி சேர்ந்தது, மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தது. இவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி. அவதூறு பிரசாரத்தை பரப்புகிறார்கள்.
அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று பேசி முடித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், தேனி ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர துணை செயலாளர் சுந்தரபாண்டியன் உள்பட அதிமுக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments