Skip to main content

போடி அருகே, மணியம்பட்டி கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தேனி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தேனி, செப்.30-

தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர்  ரஞ்ஜீத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, 

தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை அருகே மணியம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில்  சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்திற்கு சிலமலையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய சாலையானது 36 அடி கொண்டதாகும். ஆனால்  சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்பொழுது 12 அடி சாலையாக மாறிவிட்டது இதனால் இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்வதற்காக வருகின்ற பள்ளி வாகனம் மற்றும் அவசர காலத்தில் மருத்துவ மனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதுபோல தனி நபர் ஒருவர் சுயநலத்திற்காக மின் கம்பத்தை நடு சாலையில் அமைக்க மின்சாரத்துறை  அலுவலர்கள் ஏற்பாட்டில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது மேலும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 

இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு அளித்து பல நாட்கள் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தங்களிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

...................................

நாகராஜ், தலைமை நிருபர் 



Comments