Skip to main content

தேனி மாவட்டத்தில், வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்கும் பொருட்டு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

தேனி, செப்.2-
தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் வட்டம்,  மேகமலை மணலார் பகுதியில் 2.9.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாட்டில் வளரிளம்  பருவத்தில் அதிகமாக கர்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் திட்டத்தினை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில்   தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழ்நாட்டில்  வளரிளம் பருவத்தில் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த வட்டாரங்களில் உள்ள மக்களுக்கு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம்  செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.  

அதனடிப்படையில் இன்றைய தினம்  இத்திட்டம் தமிழ்நாட்டில்  தேனி  உட்பட, 10  மாவட்டங்களில்  துவக்கி  வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில்  மொத்தம் உள்ள 8 வட்டங்களில் 6 வட்டங்களில் வளரிளம் பருவத்தில் கர்ப்பங்கள் அதிகமாக நிகழ்வதால் இத்திட்டம் மேகமலையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.                       
24 வட்டாரங்களில்  ஒரு துணை சுகாதார மையத்திற்கு  5 கிராமங்கள் வீதம் 2320 கிராமங்களில்  தெரு நாடகங்கள் நடைபெற உள்ளது. பெண்கள் இளம்வயதில் திருமணம் செய்யும்போது, பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பத்தை தாங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்காது. 

இதனால் குழந்தை  மற்றும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும்.  இதுதொடர்பாக,  சமூகநலத்துறையின் சார்பில்   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கலைக்குழுவினர் மூலம் தெரு நாடகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கலைக்குழுவினர் மூலம் வளரிளம் பருவத்தினர் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளம்வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தி  சமூக மாற்றுத்தை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 

தமிழ்நாட்டில்  மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு இலட்சம் மகப்பேறு  தாய்மார்களில் கடந்த 2021-2022  ஆம் ஆண்டில்  90 ஆகவும்,  2022-2023  ஆம் ஆண்டில்  52 ஆகவும், 2023-2024  ஆம் ஆண்டில்  45.5 ஆகவும் 2024-2025 ஆம் ஆண்டில் 39.4 ஆகவும் குறைந்துள்ளது. 
மகப்பேறு குழந்தை இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 2021-2022  ஆம் ஆண்டில் 10.4  ஆகவும்,  2022-2023    ஆம் ஆண்டில் 10.2 ஆகவும், 2023-2024  ஆம் ஆண்டில்  8.2  ஆகவும், 2024-2025 ஆம் ஆண்டில் 7.7 ஆகவும் குறைந்துள்ளது.  

இதில் தேனி மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதமானது 43.3 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் 9.4 ஆகவும் உள்ளது.  மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை  பூஜ்ஜிய விகிதமாக குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  

தேனி மாவட்டத்தில் அதிக வளரிளம் கர்ப்பங்கள் நிகழும் 6 வட்டங்களில் உள்ள 105 துணை சுகாதார நிலையங்களில், ஒரு துணை சுகாதார நிலையத்திற்கு 5  வீதம் 525  தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ துறையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48,  இதயம் காப்போம்,  நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவம்  போன்ற பல்வேறு வகையான சிறப்பு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

மேலும், குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
மருத்துவ நல்வாழ்வுத்துறையின் சுகாதார திட்டங்கள் சேவைகள் குறித்து தெரிந்து கொள்ள 104  என்ற எண்ணையும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக இலவச 1098 என்ற எண்ணையும்,  மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு  தொடர்பான ஆலோசனைகள் பெற 14416 என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா ரூ.6000/- வீதம் 2 பயனாளிகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பெட்டகம் 4 பயனாளிகளுக்கும், மருந்து பெட்டகம் 2 பயனாளிகளுக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழங்கினார். 
                                   
இந்நிகழ்வில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேஹா ப்ரியா, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக் பரஸ்நாத் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி,  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது,  இணை இயக்குநர்கள் செந்தில்குமார் (ஆரம்ப சுகாதார நிலையங்கள்), சுரேஷ்குமார் (பயிற்சி), மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், உதவி இயக்குநர் (பேரூராட்சி) கிறிஸ்டோபர் தாஸ்,  மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்  சசிதீபா,  துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், வட்டார மருத்துவ அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டர்.
........................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 



Comments