தேனி, ஆக.28-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்.ஆர் வல்கனைசிங் கடை முன்பு வைத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 28.8.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, தேனி மாவட்ட தலைவர் சுந்தர வடிவேல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் தேனி செல்வக்குமார், மாவட்ட செயலாளர் திருவரங்கபெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் உள்பட நகர முக்கிய பிரமுகர் பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், இந்து எழுச்சி முன்னணி மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை, தேவராட்டம், கேரள கலைகளுடன், முளைப்பாரி ஆகியவற்றுடன் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்களில் கோலாகலமாக அணிவகுத்து சென்றன. இந்த ஊர்வலத்தை தேனி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
ஊர்வலம் தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கி நகர் பகுதி வழியாக தேனி நேரு சிலையை கடந்து அரண்மனை புதூர் பகுதியில் செல்லக்கூடிய முல்லை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments