தேனி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில்;: விவசாய நிலங்கள் அருகே குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: வலையபட்டி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, ஆக.19-
தேனி மாவட்டம், போடி தாலுகா, கோடாங்கிபட்டி கிராமம், வலையபட்டியை சேர்ந்த தங்கதுரை மற்றும் கிராம மக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
எங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மட்டுமே பிரதான தொழிலாக நடத்தி வருகின்றனர். எங்கள் ஊரில் பெரும்பான்மையானோருக்கு விவசாய நிலங்கள் அகமலை வனச்சரக பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அதில் எங்கள் ஊர் மக்கள் விவசாயம் செய்தும், கால்நடைகளை மேய்த்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளத்தை சேர்ந்த ராமசுப்பு மகன் சீனிவாசன் என்பவர் எங்கள் ஊரை சுற்றி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் முறைகேடாக உரிமை ஆவணங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த நிலங்களில் ஒரு சில பகுதியில் கிராவல் மற்றும் உடைகல் குவாரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்கள் எதிர்ப்பையும் தாண்டி அமைத்து விட்டார். அந்த குவாரிக்கு சென்று வருவதற்கு எங்கள் ஊரில் அமைந்துள்ள மணல் நிறைந்த ஓடையில் குவாரி கற்களை எடுத்து செல்லும் வாகனங்கள் சென்று வருவதற்காக கிராவல் மண்ணை அடித்து ஓடையை உருமாற்றம் செய்துவிட்டார்.
மேலும் அந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு அடியில் வெடிவைத்து தகர்த்ததில் எங்கள் ஊரில் பல கிணறுகளிலும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர் வறண்டு விட்டது. இதனால் மேற்படி குவாரி சம்பந்தமாக எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இதனால் அந்த குவாரியை நிறுத்திய சீனிவாசன் அதை முறைப்படி மூடாமல், அதற்கு அருகிலேயே தற்போது சர்வே எண்கள். 110/3,4,5, 127/1,2-ல் மீண்டும் புதிதாக ஒரு குவாரி அமைக்க கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அது சம்பந்தமான பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை கடந்த 3.9.2024 தேதியில் அப்போதிருந்த மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷாஜீவனா நடத்தினார். அதில் நாங்கள் அனைவரும் குவாரி அமைக்கக்கூடாதென எங்களது ஆட்சேபனையை கண்டிப்பாக தெரிவித்தோம்.
அதனால் குவாரி அமைக்க உரிமம் வழங்குவதை அப்போது கலெக்டர் நிறுத்தி விட்டார். அதன்பிறகு தற்போது அதே சர்வே எண்கள். 110/3,4,5, 127/1,2-ல் குவாரியை அமைக்க சீனிவாசன் கேட்காமல் மீண்டும் விண்ணப்பித்து, அதுதொடர்பான ஆட்சேபனை எதையும் பொதுமக்களிடம் கேட்காமல் குவாரி உரிமத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. இதை அறிந்து நாங்கள் அனைவரும் எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கடந்த 5.7.2025-ம் தேதியில் ஆட்சேபனை கோரும் அறிவிப்பு உள்ளதாக தெரிவித்தார். மேற்படி கிராம நிர்வாக அலுவலர் அறிவிப்பை தயார் செய்து விட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமலும், பொது இடங்களில் அறிவிப்பை ஒட்டாமலும், மறைமுகமாக வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு உரிமம் வழங்க அறிக்கை வழங்கியுள்ளது எங்களுக்கு தெரியவந்தது. தற்போது குவாரி அமைக்க உரிமம் வழங்கியுள்ள நிலங்கள் அகமலை வனச்சரக பகுதியிலிருந்து வெறும் 400 மீட்டர் தொலைவிலும், முந்தைய குவாரிக்கு வெறும் 300 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பழைய குவாரியை முறையாக இன்னும் மூடவில்லை.
இவ்விடத்தில் நான்கு புறத்திலும் ஏழை எளிய மக்களின் விவசாய நிலங்களும், அதில் ஆழ்துளை கிணறுகளும் அருகிலேயே அமைந்துள்ளது. மேலும் இவ்விடத்தின் இருபுறத்தை ஒட்டி சர்வே எண். 110/2 மற்றும் 110/6 ஆனது நீர்வழி ஓடைகளாகும். எனவே கலெக்டர் அவர்கள் பழைய குவாரிகளை சட்ட முறைபடி முழுமையாக மூட வகைசெய்தும், சர்வே எண்கள். 110/3,4,5, 127/1,2-ல் குவாரி அமைக்க வழங்கியுள்ள உரிமத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிடவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments