Skip to main content

சின்னமனூர் கருங்கட்டான்குளம் பால் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் பணத்தை திருப்பி தர இழுத்தடிப்பு: மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு


தேனி, ஆக.19-
தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, பழனிச்சாமி, அமானுல்லா, முனிராஜா, செல்லப்பாண்டி, போஸ் என்பவருடைய மனைவி அன்னலட்சுமி ஆகியோர் தேனி மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க மாவட்ட தலைவர் கே..குப்பமுத்து காளை தலைமையில், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது. நாங்கள் மட்டுமல்லாமல் 25 உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு பதிவு செய்யப்படாத சின்னமனூர் கருங்கட்டான்குளம் பால் வியாபாரிகள் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி அந்த சங்கமானது இன்று வரை இயங்கி கொண்டு வருகிறது. 

இதுவரையில் இந்த சங்கமானது பதிவு செய்யப்படவில்லை. சங்கம் பதிவு செய்யப்படாததால் சங்கத்திற்கு என்று துணை விதிகள் எதுவும் இல்லை. இந்த சங்கத்தில் நாங்கள் ஆரம்ப கால கட்டத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறோம். இதில் அன்னலட்சுமி கணவர் போஸ் நாடார் இந்த சங்கத்தின் முன்னாள் உறுப்பினராவார். அவர் கடந்த 24.8.2020-ம் தேதி இறந்து விட்டார். அதனால் தற்போது அவருக்காக, அவருடைய மனைவி  எங்களுடன் இணைந்து இந்த புகாரை அளிக்கிறார்.

நாங்கள் இந்த சங்கத்தில் சேர்ந்த காலகட்டத்தில் இருந்து சந்தாக்களை தவறாமல் செலுத்தி வந்தோம். மேலும் சங்கமானது சங்க உறுப்பினர்கள் பெயரில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கி அந்த அந்த திட்டத்திற்காக பண வரவு செலவுகள் நடந்து வந்தது. இந்த திட்டத்தின் ஒன்றான வீட்டு மனை வழங்கும் திட்டத்தினை உருவாக்கினர்கள், இந்ததிட்டத்தில் சேர்ந்து வீட்டுமனைக்கான தவணை தொகையை செலுத்தினோம், அதோடு அல்லாமல் சங்கத்தின் மூலமாக சின்னமனூர் தமிழ்நாடு மெர்கெண்டைல் வங்கியில் நவரத்தின மாலா மற்றும், சிரஞ்சீவி திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு உறுப்பினர் பெயரிலும் பணம் செலுத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்களிலும் நாங்கள் சேர்ந்தோம். இது அல்லாமல் மாத சந்தா தொகையும் தவறாமல் செலுத்தி வந்தோம், தற்போது நாங்கள் அனைவரும் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்டோம். 

இந்நிலையில் நாங்கள் மேற்படி சங்கத்தில் உறுப்பினராக இருந்த சமயத்தில் சங்கத்திற்கு செலுத்திய சந்தா தொகை மற்றும் பங்கு தொகைகளை தொடர்ந்து சங்க பொறுப்பாளர்கள் கணக்கிட்டு தர மறுத்து வருகின்றனர், மேலும் எங்கள் பெயரில் சின்னமனூர் மெர்கெணடைல் வங்கியில் செலுத்திய பணத்தையாவது பெற்று தரும்படி சங்க பொறுப்பாளர்களிடம் கேட்டால் வங்கியில் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறி விரட்டி விடுகின்றனர், வங்கியில் சென்று கேட்டால் எங்கள் வங்கி கணக்கு செயலற்ற நிலையில் உள்ளது என்றும், பணத்தினை சங்க பொறுப்பாளர்கள் மூலம் தான் பெற்றுக் கொள்ளும்படியும் அதனால் சங்க பொறுப்பாளர்களை அழைத்து வரும்படியும் கூறிவருகிறார்கள். 

இதனால் நாங்கள் சங்கத்திற்கு செலுத்திய சந்தா தொகை, பங்கு தொகை மற்றும் வங்கியில் எங்கள் பெயரில் செலுத்திய பணம் எதையும் இதுவரையில் பெற முடியாமல் தவித்து வருகிறோம். இதில் அன்னலட்சுமி தற்போது கணவர் இல்லாமல் தவித்து வருகிறார். மேலும் மற்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தற்போது வயோதிகம் அடைந்தும் பணத்தை பெற முடியாமல் தவித்து வருகிறோம். ஆனால் சங்க பொறுப்பாளர்கள் அனைத்து உறுப்பினர்களின் பெயரில் செலுத்திய பணம் அனைத்தையும் வைத்து கொண்டு கணக்கு காட்டாமல் நிதி நிறுவனம் நடத்தி அதிக பணம் சம்பாரித்து வருகிறார்கள். உறுப்பினர்களான நாங்கள் எங்கள் பணத்தை பெற முடியாமல் தவித்து வருகிறோம், மேலும் சங்க பொறுப்பாளர்களிடம் கணக்கிட்டு பணம் கொடுக்கும்படி கேட்டால் அடியாட்களை வைத்து அடித்து துன்புறுத்துகிறார்கள், கடந்த மாதம் கூட சின்னதம்பி சங்க பணம் கேட்டதற்காக அடித்து காலை உடைத்து தற்போது மிகுந்த சிரமத்தில் இருந்து வருகிறார், வயதான எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கணக்கிட்டு தராமல் இன்று நாளை என்று காலம் கடத்தி வருகின்றனர். மீறி கேட்டால் வயதானவர்கள் என்று பார்க்காமல் அடித்து தகாத வார்த்தைகளினால் திட்டி துன்புறுத்தி வருகிறார்கள். இதில் அன்னலட்சுமி என்பவர் வயோதிகம் அடைந்து நடக்க முடியாமல் தவித்து வருகிறார். வயதான காலத்தில் அவருடைய கணவர் சேர்த்து வைத்த பணத்தை முறையாக மனைவிக்கு கொடுக்காமலும் ஏமாற்றி வருகின்றார்.
எனவே சின்னமனூர் கருங்கட்டான் குளம் பால் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மனோகரன், உப தலைவர் மாணிக்கம்பிள்ளை, செயலாளர் பாண்டியன், பொருளாளர் இளமதி மற்றும் கணக்கர் குருசாமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments