தேனியில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது
தேனி, ஆக.12-
தேனி மாவட்டம். தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் 12.8.2025 அன்று வேளாண்மைத்துறையின் சார்பில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது.
மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மாணவர்களும் பங்கேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நவீன காலத்தின் அதிகப்படியான உற்பத்தி தேவைக்காகவும், குறைந்த காலத்தில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் வேதி உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தையே செய்து வந்தார்கள் மேலும், விவசாயம் குறித்து படிக்காமலே அதிக மகசூல் பெறுவது குறித்து மேலான அறிவை பெற்றிருந்தனர்.
பாரம்பரிய முறையை பின்பற்றாமல் அறிவியல் ரீதியாக விவசாயம் செய்வதற்கு முறையாக பயிற்சி பெற்று விவசாய பணிகளை மேற்கொள்ள எதிர்கால தலைமுறையினருக்கு விவசாயம் குறித்த படிப்பறிவு கட்டாயம் தேவைப்படுகிறது.
தற்போதைய வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டிய சூழ்நிலை உள்ளது. விலை சற்று அதிகமாக இருப்பினும் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகமாகவே உள்ளது.
செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருத்துகளை பயன்படுத்தாமல் குறைந்த காலத்தில் அதிக மகசூல் பெற முடியும் என்பதை எடுத்துக்காட்டவே பல்வேறு இடங்களில் அங்கக வேளாண்மை முறையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருட்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் இயற்கையாகவே நல்ல சுற்றுச்சூழலை பெற்றுள்ளது. மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் எளிதாகவே கிடைக்கிறது.
இந்த கருத்தரங்கின் நோக்கம் தேனி மாவட்டத்தில் அடுத்த வருடத்தில் மீண்டும் இயற்கை விவசாயத்தை மீள கொண்டு வருவதாகும். இன்றைய தினம் அங்கக வேளாண்மை முறையின் மூலம் வேளாண் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள உள்ளார்கள்.
அதனடிப்படையில் அங்கக வேளாண்மையில் பயி மரபியல் பன்முகத்தன்மை. பயிர் சுழற்சி இயற்கை பூச்சிக்கொல்லி குறித்து தொழில்நுட்ப உரைகள் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் எடுத்துரைக்கப்பட உள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு சந்தேகங்கள் ஏதுமிருப்பின் அதனை உடனடியாக கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேனி மாவட்டத்தின் பசுமையான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
முன்னதாக வேளாண்மைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருத்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, விதை மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் முத்துசேகர் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, உதவி வேளாண்மை அலுவலர் பிரசன்னா மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments