ஹைவேவிஸ் பேரூராட்சியில், தலைவர் பதவிக்கு முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: 7 கவுன்சிலர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, ஜூலை.29-
தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் 15-வது வார்டு கவுன்சிலர்கள் பதவி உள்ளன. இதிலிருந்து தலைவர் பதவி தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் தலைவராக இருந்தவர் இறப்பின் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவி காலியாகி இருந்து வருகிறது.
இந்த பேரூராட்சி தலைவர் பதவியை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்களிடம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 15-வது வார்டு கவுன்சிலர் ஹேமா தலைமையில் 7 கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தேர்தல் அறிவிப்பு கடிதத்தை எங்களிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் கடந்த 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் 10.30 மணிக்கு ஹைவேவிஸ் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் மன்ற அரங்கிற்கு செயல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சீனிவாசனிடம் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாருங்கள் என கேட்டேன். அப்போது அவர் என்னிடம் 11 மணி வரை நேரம் இருக்கிறது. தற்போது 7 வார்டு கவுன்சிலர்கள் மட்டுமே வருகை தந்துள்ளீர்கள். மீதம் உள்ள கவுன்சிலர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என கூறினார்
அதன் பின்னர் மறுபடியும் 11.05 மணி ஆனபோது வேட்பு மனுவை தாருங்கள் என்று செயல் அலுவலரிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கும் போது மீதமுள்ள கவுன்சிலர்கள் உள்ளே வருகை புரிந்தனர். அவர்களை தேர்தல் நடத்தும் அலுவலர் வரவேற்று உடனே வேட்பு மனுவை 2 போட்டியாளருக்கும் கொடுத்தார். இதனை அடுத்து வேட்பு மனுவை எழுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்தேன். 2 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டோம் ஓட்டு போடும் நேரம் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 2 வேட்பாளர்களுக்கும் சரிசமமாக தலா 7 ஓட்டுக்கள் விழுந்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் 2 வேட்பாளர்களும் தலா 7 ஓட்டுகள் பெற்றுள்ளதால் குழுக்கள் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் செய்வோம் என சொன்னார்.
அதில் தேர்தல் விதிமுறை சட்டத்தை மீறி தேர்தல் அலுவலரான சீனிவாசன், பேரூராட்சி கிளர்க் முருகன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமா மற்றும் நித்திய பிரியா ஐயா எங்கள் இருவர் பெயர்களையும் சீட்டில் எழுதி சீட்டை அனைவரிடமும் காட்டிவிட்டு தேர்தல் அலுவலரான சீனிவாசன் ஒரு சீட்டை மிகவும் சின்னதாகவும், ஒரு சீட்டை பெரிதாகவும் சுருட்டி ஒரு டப்பாவில் போட்டு, அவரே அந்த சுருட்டிய சீட்டிலிருந்து அவர் அடையாளப்படுத்தி இருந்த பெரிய சீட்டை எடுத்து நித்திய பிரியா பெயர் வந்ததாக கூறினார். அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை தேர்தல் நடத்தும் அலுவலர் பொருட்படுத்தவில்லை. அதனால் இந்த தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக நடத்தியுள்ளார். எனவே முறைகேடாக நடந்த இந்த தேர்தல் ரத்து செய்துவிட்டு மீண்டும் முறைப்படி தங்களின் முன்னிலையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
...............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments