கம்பம் அருகே: மகளிர் குழுவினரை கல்குவாரிக்குள் நுழையவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, தேனி எஸ்.பி.-யிடம் கோரிக்கை மனு
தேனி, ஜூலை.22-
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் வ.உ.சி தெருவை சேர்ந்த சின்னதம்பி மனைவி ஜானகி என்பவர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பரத் ஆகியோர் தலைமையில் மகளிர் குழுவினர் மற்றும் கட்சியினர் உடன் சேர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது
நானும் எனது குடும்பமும் காமயகவுண்டன்பட்டி கிராமம் சர்வே எண் 1372/1-ல் கட்டுப்பட்ட அரசு கல்குவாரியில் வடக்கு பகுதியில் 170 அடி அகலத்தில் கைகளால் கல் உடைத்து, அதனை சிறு துண்டுகளாக்கி விற்பனை செய்து, அதில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு நானும், எனது பிள்ளைகளும் பல ஆண்டுகளாக பிழைத்து வந்தோம். மேற்படி பாறை பகுதியானது எங்களது அனுபவத்தில் தற்பொழுது வரை இருந்து வருகிறது. எங்களது பாறையில் வேலை பார்த்து வந்த பெரியகருப்பன், S/o ஆங்கத்தேவர் என்பவர் பாறை விழுந்து கடந்த 2008-ல் இறந்துவிட்டார். அதற்கு விபத்து நஷ்ட ஈட்டு தொகையாக ரூ.4.5 லட்சம் கொடுத்தோம்.
அதன் பின்னர் அரசு 2012-ல் மேற்படி பாறை உடைப்பதை முறைப்படுத்த வேண்டி பாறை உடைக்க இடைக்காலமாக தடை விதித்தது. அதன்பின்னர் கடந்த 13 ஆண்டுகளாக மேற்படி பாறையை பாதுகாத்தும், மண்சரிவுகளை சரிசெய்தும், மழை தண்ணீர் தேங்குவதை அப்புறப்படுத்தியும் பராமரித்து வந்தேன். இதுவரை மேற்படி பாறையை பராமரிக்க நான் ரூ.40 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். பின்னர் முறையாக அரசின் அனுமதி பெற வேண்டி, நானும் என்னைப்போல் கல்உடைப்போர்களும் சேர்ந்து சங்கிலிகரடு கல்உடைப்போர் மகளிர் சங்கம் என்ற பெயரில் மகளிர் சுயஉதவிக்குழு அமைத்து அதன் செயலாளராக நான் இருந்து வந்தேன்.
நாங்கள் பெண் என்பதால் எங்களால் ஒவ்வொரு நாளும் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வர இயலாத காரணத்தினால், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், செல்லத்துரை பரமையா, வனராஜ், ஆகியோர்கள் பாறையின் 1-ம் பகுதியில் பாறை உடைத்துக்கொண்டு இருந்த 21 பேர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்து போக்குவரத்துகளையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம், நாங்களே ஒரு மகளிர் குழு அமைக்கிறோம் என்று கூறியும், பாறைக்கு அனுமதி வாங்கி எப்பொழுதும் போல் பாறையை நீங்கள் உடைத்துக்கொடுங்கள் நாங்கள் பாஸ் மட்டும் போட்டுக்கொள்கிறோம் என்று உறுதி கூறினர். அதற்கு நாங்கள் அனைவரும் சம்மதித்தோம். டெண்டர் எடுத்த பின்பு இந்த டெண்டருக்கு 3 கோடியே 10 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், மதுரையை சேர்ந்த முருகேசன் ரூ.2 கோடி செலவு செய்துள்ளதாகவும், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை ரூ.1 கோடி செலவு செய்துள்ளதாகவும், இதற்கு மாதந்தோறும் வட்டி மற்றும் அசலை செலுத்த வேண்டும் என்றும், மீதம் வரும் தொகையை இந்த 21 பாறைக்காரர்களுக்கும் மற்றும் மகளிர் குழுவிற்கும் பிரித்து தருவதாக கூறியும், நீங்கள் யாரும் பாறை பக்கம் வரக்கூடாது என்றும் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த குருஇளங்கோ மற்றும் சில ஆட்களை வைத்து கடந்த மாதம் மிரட்டினார்.
அதற்கு பயந்து 20 பாறைக்காரர்களும் கையொப்பம் செய்தார்கள். நான் அதனை மறுத்து வீட்டிற்கு வந்துவிட்டேன். கேரளாவைச் சேர்ந்த சிலரிடம் சட்டத்திற்கு புறம்பாக பலகோடி ரூபாயை முன்பணமாக வாங்கி கொண்டு, இங்கு உடைக்கும் கற்கல் அனைத்தும் கேரளா மாநிலத்திற்கு தருவதாக பேரம் பேசியுள்ளார்கள். கடந்த மாதம் 21 பாறைக்காரர்களுக்கும் பங்கு பிரித்துள்ளதாகவும், அதற்கு எனது பங்காக ரூ.9,000-தருவதாக குருஇளங்கோ எனக்கு தொலைபேசியில் அழைத்து வந்து வாங்கி செல்லுமாறு கூறினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
இந்நிலையில் கடந்த வாரம் என் அனுபவத்தில் உள்ள பாறைக்கு சென்றபோது குருஇளங்கோ, ராஜேந்திரன், பரமையா, செல்லத்துரை, வனராஜ், முத்துக்குமார், அரசேந்திரன் மற்றும் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 10-க்கும் மேற்பட்டோர் என்னை பார்த்து "இது அரசு பாறை, இதனை நாங்கள் உடைக்க அனுமதி வாங்கியுள்ளோம், உனக்கு இங்கு வர அனுமதியில்லை. மீறி வந்தால் உன்னை கொலை செய்து விட்டு, அந்த வழக்கையும் பார்த்துக்கொள்வோம், உன்னால் முடிந்ததை பார், நான் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும், அமைச்சர்களுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பாறையை நடத்தி கொண்டு இருக்கிறேன், உன் குடும்பத்தையே கொலை செய்துவிட்டு ரூ.20 லட்சத்தில் வழக்கை முடித்துக்கொள்வோம்" என்று மிரட்டினார்கள். எனது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். நான் மேற்படி பாறையில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு தான் எனது வாழ்க்கையை நடத்த வேண்டும்.
எனவே கருணை கூர்ந்து எனது புகார் மனுவினை ஏற்று, எனது பாறையை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு. இதுவரை நான் மேற்படி பாறையை பராமரிக்க செலவு செய்துள்ள ரூ.40 லட்சத்தை மறைத்து மோசடி செய்து, என்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, மேற்படி பாறையை டெண்டர் எடுத்துக்கொண்டு, தற்பொழுது மேற்படி பாறைக்குள் நுழையக்கூடாது என்று என்னை தடுத்து தகாத வார்த்தைகளால் பேசி, எனக்கு கொலைமிரட்டல் செய்த மேற்படி குருஇளங்கோ, ராஜேந்திரன், பரமையா, செல்லத்துரை, வனராஜ் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments