தேனி மாவட்ட நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் திமுக எம்.பி.,திருச்சி சிவாவை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தேனி, ஜூலை.21-
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடார்கள் உறவின் முறையின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வினோஜி தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு திமுக எம்.பி, திருச்சி சிவாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களை பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெய் முருகேஷ், அருள் பிரகாஷ், சுரேஷ், கந்தன் உள்பட நாடார் உறவின்முறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, கடந்த 15.7.2025-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை பெரம்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசும் போது, கு.காமராஜர் அவர்கள் ஏ.சி., இல்லாமல் தூங்க மாட்டார். அவர் உயிர் பிரியும் நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்றும் படி கூறியதாகவும் அவர் மேடையில் உரையாற்றினார்.
உண்மைக்கு புறம்பான செய்தியை மேடையில் உரையாற்றினார். ஏழ்மையாக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதுாறாக பேசியது. எங்களுக்கு மிகுந்த மனவருந்ததை அளித்துள்ளது. எனவே மறைந்த பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களை அவமதித்து பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments