தேனி, ஜூலை.16-
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 123-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித் திருவிழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு உறவின்முறை தலைவர் தர்மராஜன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். உறவின்முறை உபதலைவர் ஜீவகன், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கணக்கானோர் ரத்ததானம் செய்தனர்.
முன்னதாக மினி மாரத்தான் ஓட்டத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு உறவின்முறை நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து காமராஜர் பிறந்த தின கல்வித்தருவிழா ஊர்வலம், அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் தேனி நகர் பகுதியை சுற்றி வந்தது.
இதனை அடுத்து காமராஜர் திருவுருவ சிலை முன்பு உறவின்முறை நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் தேனி நகர முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரிமா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
...................................
நாகராஜ், செய்தி ஆசிரியர்
Comments