Skip to main content

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்

தேனி, ஜூலை.15-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை 15.7.2025 அன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,34 ஆகிய வார்டு பகுதிகளுக்கு கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இதேபோன்று கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 ஆகிய வார்டு பகுதிகளுக்கு உலகத்தேவர் தெரு சமுதாய கூடத்திலும், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 1 முதல் 7 வார்டுகளுக்கு பி.ரெங்கநாதபுரம் பகுதி சமுதாய கூடத்திலும், ஆண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட அனுப்பப்பட்டி, போடிதாசன்பட்டி, ஏத்தக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டி சமுதாய கூடத்திலும், க.மயிலாடும்பாறை ஊராட்சியில் கடமலைக்குண்டு பத்ரகாளியம்மன் மண்டபத்திலும் நடைபெற்றது. 
இந்த முகாம்களில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.


அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை, சென்று சேரும் வகையில் நிர்வாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் 28 முகாம்கள், பேரூராட்சி பகுதிகளில் 21 முகாம்கள், வட்டார ஊராட்சிகளில் 25 முகாம்கள் என 74 முகாம்கள் 15.7.2025 அன்று முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய 13 துறைகளின் மூலம் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

பெரியகுளத்தில் நடைபெற்ற முகாமில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத் பீடன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சாந்தி, உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார். நகராட்சி ஆணையாளர் தமீஹா சுல்தானா, தாசில்தார் மருதுபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments