கம்பம் அருகே மகளிர் சுய உதவி குழுக்கள் பெயரில் நடத்தும் கல்குவாரியில் தனிநபர்கள் குறுக்கீடு: தேனி கலெக்டரிடம் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் கோரிக்கை மனு
தேனி, ஜூலை.15-
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு வருவாய் துறைக்கு சொந்தமான புல எண் 1372/1-ல் சங்கிலி கரடு கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரி 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 6 பகுதிகள் ஏலம் விடப்பட்டு 1-ம் பகுதி சங்கிலிக்கரடு கல்லுடைப்போர் மகளிர் சங்கத்திற்கும் 2-ம் பகுதி கே.கே.பட்டி கல்லுடைப்போர் மகளிர் சங்கத்திற்கும், 3-ம் பகுதி அன்னை சத்யா மகளிர் சுய உதவிக்குழு சங்கத்திற்கும் 4-ம் பகுதி அன்னை தெரசா கல்லுடைக்கும் மகளிர் நல முன்னேற்ற சங்கத்திற்கும் 5-ம் பகுதி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மகளிர் சுய உதவி குழுவிற்கும், 6-ம் பகுதி சங்கிலி கருப்பன் தண்ணீர் பாறை கல்லுடைக்கும் மகளிர் நலசங்கத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்குவாரிகளை சில தனிநபர்கள் கூட்டாக சேர்ந்து பல கோடிகள் செலவு செய்து மகளிர் சுய உதவி குழுக்கள் பெயரில் பாறையை ஏலத்தில் எடுத்துள்ளனர். மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பேரிலும் பல லட்சங்களை கடன் வாங்கி உள்ளனர். இந்த கடனுக்கு உரிய வட்டியும் அசலும் செலுத்தியது போக மீதம் உள்ள பணத்தை தற்போது மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் பிரித்து தருவதாக கூறியும், இந்த மகளிர் சங்க உறுப்பினர்களை மிரட்டியும், பண ஆசை காட்டியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மகளிர் சுய உதவி குழுவில் இருந்து நீக்கியும் புதிய நபர்களை உறுப்பினராக சேர்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில் காலங்காலமாக இந்த பாறையை உடைத்து விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் கொண்டு தங்களது வாழ்க்கை நடத்தி வரும் கல்லுடைப்போர் மகளிர் சுய உதவி குழுவினரிடமிருந்து பாறையை மிரட்டி வாங்கி ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பாறைகளை உடைத்தும் யூனிட் அளவுகளை தெரிந்து கொள்ள வெயிட் பிரிட்ஜ் பயன்படுத்தாமல் குறைந்த யூனிட் நடைபாஸ் வைத்துக்கொண்டு அதிகப்படியான யூனிட்டை கேரளாவுக்கு கடத்தி பல லட்சங்களை அந்த நபர்கள் சம்பாதித்து வருகின்றனர்.
அதுபோல இந்த கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என அறிந்து கொள்ள ஜி.பி.எஸ் கருவி பொருத்த அரசு உத்தரவிட்டு இருந்தும் அதனை பொருட்படுத்தாமலும் கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான நடை பாஸ்களை அதிக நேரம் கணக்கிட்டு வழங்கி அதன் மூலம் ஒரே நடைபாஸ்சை கொண்டு பல லோடுகளை கடத்தியும் அரசின் எந்தவொரு நிபந்தனையும் கடைப்பிடிக்காமல் இரவு பகல் என எந்த நேரமும் பாறையை உடைத்து டிப்பர் லாரி மூலம் கேரளாவிற்கு கனிமங்களை எந்த ஒரு நடைபெற்றும் இன்றி கொண்டு செல்கின்றனர்.
எனவே ஒரு தனிக்குழு அமைத்து சம்பந்தப்பட்ட இந்த கல்குவாரி பகுதியினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
...................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments