தேனியில் நாளை மறுநாள் நடக்கிறது: எல்.எஸ்.மில்ஸ் சார்பில் இலவச செயற்கை கை, கால் வழங்க பரிசோதனை முகாம்
தேனி, ஜூலை.10-
தேனி எல்.எஸ்.மில்ஸ் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகள், சர்க்கரை நோய் மற்றும் விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் மற்றும் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச செயற்கை கை, கால், காது கேட்கும் கருவி ஆகியவை வழங்கப்படுகிறது.
இதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நாளை மறுநாள் சனிக்கிழமை (12.7.2025) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13.9.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தேனி அருகே வீரபாண்டி பை பாஸ் சாலையில் உள்ள எல்.எஸ்.மில்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அடையாள அட்டையின் நகல் ஒன்றும் கொண்டு வரவேண்டும்.
முகாமில் சென்னையில் இருந்து பிரீடம் டிரஸ்ட் சிறப்பு டாக்டர்கள் மற்றும் செயற்கை கை, கால்கள் தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு செயற்கை கை மற்றும் கால் செய்ய அளவெடுப்பார்கள். மேலும் காது கேளாதவர்களுக்கான பரிசோதனைகள் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்படும்.
இந்த பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அனைத்து வகையான உபகரணங்களும் தயார் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.
இந்த முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் எல்.எஸ்.மில்ஸ் நிர்வாகத்தின் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பழனிசெட்டி பட்டி பஸ் நிறுத்தம், வீரபாண்டி கோவில் பஸ் நிறுத்தம், போடி விலக்கு, ஆர். எம்.டி. சி. காலனி பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து பயனாளிகளை அழைத்து வருவதற்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த இலவச செயற்கை கை, கால், காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முகாம் மூலம் பயன் பெறும் வகையிலும், சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காது கேட்கும் கருவிகள் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி எல்.எஸ்.மில்ஸ் சேர்மன், நிர்வாக இயக்குனர் S.மணிவண்ணன் மற்றும் சென்னை ப்ரீடம் டிரஸ்ட் நிர்வாகிகள் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
..................................
நாகராஜ், செய்தி ஆசிரியர்
Comments