தேனி , மே.22-
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 தாலுகாக்களில் 22.5.2025 முதல் 30.5.2025 வரை (24.5.2025, 25.5.2025 மற்றும் 26.5.2025 ஆகிய நாட்கள் நீங்கலாக) 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் நாளான 22.5.2025 அன்று பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி பிட் 1, கெங்குவார்பட்டி பிட் 2, தேவதானப்பட்டி பிட் 1, தேவதானப்பட்டி பிட் 2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது .இந்த ஜமாபந்தி வருவாய் தீர்வாயத்தில் 172 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதேபோன்று உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பூலானந்தபுரம். கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 56 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட் 1, ஆண்டிபட்டி பிட் 2 ஆகிய கிராமங்களுக்கு பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 65 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதுபோல தேனி வட்டத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் தேனி தாசில்தார் சதீஸ்குமார் முன்னிலையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதேபோன்று போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட ராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி ஆகிய கிராமங்களுக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 76 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
முதல் நாளான 22.5.2023 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டை மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் விபத்து நிவாரணத்தொகை நலிந்தோர் உதவித்தொகை நிலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 599 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே பெரியகுளம் வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் பட்டாக்களை வழங்கினார்
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் நில அளவை அப்பாஸ். தாசில்தார்கள் மருதுபாண்டி, பிரதீபா உள்பட வருவாய்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments