தேரோட்ட விழாவில் முதல் மரியாதை செய்யவில்லை; வீரபாண்டி பேரூராட்சி தலைவர் தரப்பினர் அறநிலையத்துறை ஊழியர்கள் மீது தாக்குதல்:? இந்து எழுச்சி முன்னணி கண்டனம்
தேனி, மே.10
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் ராமராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கையில்,
தேனி மாவட்டம், வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் 9.5.2025 அன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவில், வழக்கம் போல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டன.
ஆனால் அன்று மாலை 6 மணி அளவில், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு, வீரபாண்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்குள் அனுமதி இல்லாமல் புகுந்து, அங்கு கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்த உதவி ஆணையாளர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை மிரட்டி, “தனக்கு முதல் மரியாதை செய்யவில்லை” என்ற காரணத்தால் 2 அரசு ஊழியர்களை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிகழ்வு அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களிடையே கடும் மன வேதனையையும், பயத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை இந்து எழுச்சி முன்னணி மாவட்டம் கடுமையாக கண்டிக்கிறது.
இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க தேனி மாவட்ட காவல் துறையை கடுமையாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
............................
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments