Skip to main content

தேனியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்டத்தின் முப்பெரும் விழா: மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்பு


தேனி, பிப்.6-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 11-வது ஆண்டு துவக்க விழா, 42-வது மாநில மாநாடு கலந்தாய்வு மற்றும் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வி.கே.வேலுச்சாமி மஹாலில் 6.2.2025 அன்று நடைபெற்றது.

விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் தேனீ செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெருமாள் மாநில இணைச்செயலாளர் காளிமுத்து, தேனி மாவட்ட கௌரவத் தலைவர் ஏ.எம்.ஆர்.ஆர். சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட செயலாளர் திருவரங்கப்பெருமாள் வரவேற்றார்.

விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்து வந்த பாதை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார். 

அதுபோல விழாவில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன், மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாநில கூடுதல் செயலாளர்கள் மணி, மகேந்திரவேல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் போது பேரமைப்பு நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் வாசித்தார்.

விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்புதீன் தொகுத்து வழங்கினார். விழா தீர்மான அறிக்கையை மாவட்ட துணைத்தலைவர் முருகதாஸ் வாசித்தார். சமூக நல உதவி திட்டங்களை மாவட்ட இணை செயலாளர் விபுகுமார் ஏற்பாடு செய்திருந்தார். மாநாடு விளக்க உரையை மாவட்ட முதன்மை துணைத் தலைவர் உதயகுமார் வாசித்தார். பேரணி அணிவகுப்பை மாவட்ட அமைப்பு செயலாளர் ஹக்கீம் செய்திருந்தார்.

விழாவில் தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சட்ட ஆலோசகர் வக்கீல் எம்.கே.எம். முத்துராமலிங்கம், மாவட்ட சிறப்பு ஆலோசகர் குமார், மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட நிர்வாக ஆலோசகர்கள் முத்துசாமி, குணசேகரன், பிரபாகரன், ரவி, செல்வம், பால்பாண்டி, சத்திய நாராயணன், தேனி நகர முதன்மை துணைத்தலைவர் விஷீவல் பிரபு,  தேனி நகர துணைத் தலைவர் கலைமணி, நகர ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நகர அமைப்பாளர் சுப்பையா, நகர இணைச்செயலாளர் கல்யாணி, நகர செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் மற்றும் தேனி நகர, மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் உள்பட வணிகர் சங்க மாவட்ட, நகர, கிளை சங்க நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது வருகின்ற மே 5-ம் தேதி வணிகர் அதிகார பிரகடன மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களையும் அழைப்பது என்றும், அந்த மாநாட்டில் தேனி மாவட்டத்தில் இருந்து 7 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தேனியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டை கொண்டு வர வேண்டும். மதுரை- போடி இடையையான தினசரி ரயில் சேவையை பகல் நேரத்திலும் இயக்கிட வேண்டும். அதுபோல திண்டுக்கல்-குமுளி ரயில்வே திட்டத்தை கொண்டு வரும் பணியை துரிதப்படுத்த வேண்டும், போடி-சென்னை ரயில் சேவையை தினசரி இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் தேனி-குமுளி இடையே உள்ள 2 வழி சாலையில் உப்பாரப்பட்டி அருகில் உள்ள டோல் கேட் முழுவதுமாக நீக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திட்டச்சாலைகளையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

4 அடுக்குகளை கொண்ட ஜி.எஸ்.டி-யை ஒரே வரி விதிப்பாக 8%, 10% என விதித்திட வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். அதுபோல நகராட்சி, உள்ளாட்சி வாடகை கட்டணங்களில் குத்தகை காலத்தை 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக தமிழ்நாடு முதல்வர் 23.7.2023-இல் அறிவிப்பு வெளியிட்டு, அதை நகராட்சி சட்ட திருத்தம் வெளியிட்ட அரசாணையை உடனடியாக அமலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

வணிகவரி சட்டங்களில் விதிமீறல்கள் இருப்பின் அதனை கிரிமினல் குற்றங்களாக, இதர குற்றங்களாகவோ கருதி வணிகர்களை குற்றவாளியாக்கும் நடைமுறையும், அபராதங்கள் விதிக்கும் நடைமுறையும் கைவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்து நடைமுறையை அரசு கையாள வேண்டும். அதுபோல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு உற்பத்தி செய்யும் இடத்திலேயே சாம்பிள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும், அதை தவிர்த்து சிறு வணிகர்களிடத்தில் சாம்பிள் என்ற பெயரில் துன்புறுத்தவோ, அபராதம் விதிக்கவோ கூடாது என்பன உள்பட 17 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாகராஜ், முதன்மை நிருபர் 


......................

Comments