தேனி மாவட்டம், தேனி தாலுகாவில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள், கல்லூரி, அங்கன்வாடி மையங்கள், கிராம நிர்வாக அலுவலகம் பேரூராட்சி அலுவலகம், நியாய விலைக்கடைகள், கூட்டுறவு சங்கங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனை, நகராட்சி குப்பை உரகிடங்கு, நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி மற்றும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்கள் 21.8.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்று, மக்களை நாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அரசு இயந்திரம் முழுவதுமாக களத்திற்கே வந்து செயல்படும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார்.

அதன்படி இன்று தேனி தாலுகாவில் உள்ள என்.ஆர்.டி. நினைவு அரசு மருத்துவமனை மற்றும் வீரபாண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பெற வருகை தந்த, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேடு, காலை உணவுத்திட்டம், சமையலறை (சத்துணவு கூடம்), கழிப்பறை போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கல்விதரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடுவிழாவில் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் அவர்கள், மரக்கன்றினை நட்டுவைத்து அடர்காடுகள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து உப்பார்பட்டியில் அமைந்துள்ள தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை சேமிக்கும் உரகிடங்கின் செயல்பாடுகள், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வளர்ச்சி வீதம், உடல் எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள் குறித்தும், வீரபாண்டி கால்நடை மருத்துவனை மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடையில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் பழனிசெட்டிபட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலை குறித்து ஆய்வு கொண்டார்.
முன்னதாக, தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும் 22.8.2024 காலை வரை பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தேனி தாலுகா பகுதியில் மாவட்ட கலெக்டர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரகாஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முரளி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன், துணை ஆட்சியர் (பயிற்சி) டீனு அரவிந்த், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ஜெய்சங்கர் வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு பால்ராஜ், தேனி தாசில்தார் ராணி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments