Skip to main content

ஆண்டிபட்டி பேரூராட்சியில் நடந்து முடிந்த டென்டரை ரத்து செய்வது குறித்து காரசார விவாதம்

 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் சந்திரகலா பொன்னுத்துரை தலைமை தாங்கினார் . துணை சேர்மன் ஜோதி சேகர் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் வரவு, செலவு, பிறப்பு, இறப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து வாசித்தார். 

இதன் பின்னர் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி அன்று ஆண்டிபட்டி  நெடுஞ்சாலை தலைசுமை ஆயம் வசூல் குறித்த ஏலம் விடப்பட்டது .இதில் 8 பேர் பதிவு செய்திருந்தனர். ஏலத்தில் 4 பேர் பங்கு கொண்டனர். இதில் அரசு தொகையாக ரூபாய் 2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 4-வது வார்டை சேர்ந்த துரைச்சாமி மகன் நாகராஜ்  ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டார். அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால், அவருக்கே டெண்டர் விடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் வருமான வரி, ஜி.எஸ்.டி உள்பட ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 140 பேரூராட்சியில் வரவு வைத்தார். இந்த ஏலத்திற்கு அப்போது இருந்த செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்திருந்தார் . கடந்த ஆண்டு ரூபாய் ஒரு லட்சத்து  55 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் முறைப்படி ஏலம் விடப்பட்டு, நாகராஜ் என்பவர் ஏலம் எடுத்து, ஏலத் தொகையினை வருமான வரி உள்பட கட்டி முடித்து  வங்கியிலும் வரவு வைத்து ஆகிவிட்டது. இந்நிலையில் சட்டப்படி நடந்த ஏலம் தான் செல்லும் என்று வாதித்தனர். இதனால் கூட்டத்தில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.


இதனைத்தொடர்ந்து பேசிய செயல் அலுவலர் கணேசன் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்ட ஆலோசனை கேட்கப்பட்டு, சட்டத்தின் முன் வடிவம் பெறப்பட்டு தீர்மானிக்கப்படும் என்று கூறியதையடுத்து பேரூராட்சி கூட்டம் முடிவடைந்தது.

S.சசிதுரை, சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்

Comments