Skip to main content

தேனி மாவட்ட கலெக்டரிடம் பாரம்பரிய முறையில் கோரிக்கை மனு வழங்கி, தேனி நகரை நேரில் பார்வையிட அழைக்கும் முயற்சிக்கு தடை: இந்து எழுச்சி முன்னணி கண்டனம்

தேனி, ஜூலை.1-

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய லோகநாதன் அவர்களின் தலைமையில், நகர மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து, பாரம்பரிய முறையிலான "வெற்றிலை–பாக்கு வைக்க மாவட்ட கலெக்டர்-ஐ அழைக்கும்" நெறிமுறைப்படி, தேனி நகரின் சுகாதார சீர்கேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் நேரில் சந்தித்து மனு வழங்கும் நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த தகவல் காவல்துறையினருக்கு சென்றவுடன், காவல் ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் ராமலட்சுமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், "வெற்றிலை–பாக்கு வைக்கும் செயல், உரிமை எடுத்தலாகப் பொருள்படும்; எனவே இதற்கு அனுமதி வழங்க இயலாது" எனத் தடை விதித்தனர்.

இதற்கு பதிலளித்த இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், “நாங்கள் எவ்வித ஆர்ப்பாட்டம் அல்லது சட்டவிரோத செயல்களும் மேற்கொள்வதற்காக அல்ல; மாறாக, பாரம்பரிய முறையில் மாவட்ட கலெக்டரை அழைத்து, தேனி நகரில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து நேரில் பார்வையிடச் செய்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தெளிவுபடுத்தினர்.

இருப்பினும் காவல்துறையினர் தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. “வெற்றிலை–பாக்கு கொண்டு செல்லக் கூடாது; கோரிக்கையை மனுவாக அளிக்க வேண்டுமென்றால், முன் அறிவிப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தி அதன் பின் மனுவை வழங்கலாம்” என அறிவுறுத்தினர்.

இதனை ஏற்ற இந்து எழுச்சி முன்னணி மாவட்ட மற்றும் நகர பொறுப்பாளர்கள், அமைதியான ஊர்வலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்று, அங்கு அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்  முத்துமாதவன் அவர்களிடம் கோரிக்கை மனுவை ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் தேனி மற்றும் கம்பம் பகுதிகளை சேர்ந்த பல்வேறு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை காவல்துறை தடுத்தது வருத்தத்திற்குரியது என இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர்  கோவிந்தராஜ், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசிற்கு கண்டனத்தை பதிவு செய்து உள்ளார்.  

...................................

நாகராஜ், தலைமை நிருபர் 




Comments